Friday, December 30, 2011

நட்பு

நண்பன் தரும் பத்து பைசாவும் -
நட்பை பேசும் பல காலம் -
பைசா கோபுரம் போல்...!

Saturday, December 17, 2011

தாய் மொழி

நீரின்றி அமையாது உலகு -
முதுமொழி - தாயே
நீ இன்றி அமைந்திருக்காது என் உலகு...!

Wednesday, December 14, 2011

இன்றைய நட்பு

ஒரு வழி பாதையாய் -
அன்பை பொழிவதற்கு -
இது தாய்மை இல்லை...!

இன்றைய வர்த்தக உலகில் -
யாருக்கும் நேரம் இல்லை -
காட்ட அன்பும் இல்லை..! 

Saturday, December 10, 2011

மூன்றெழுத்து மந்திரம்

அந்த மூன்றெழுத்து மந்திரத்திற்காக,
ஏங்கினேன் மூன்று நாட்களாய்,
அது நாட்கள் அல்ல யுகங்கள்...!

முக்காலமும் உனக்கெனத்  தந்தேன்,
இப்போதே வாய் மலர்வாய்,
என் ஆவி தவிக்கின்றது அதற்காக..!


 

சிலேடை - பூனையும் என் காதலியும்

குழந்தையாய் அழுவாள்,
தோழியாய் விளையாடுவாள்,
கண்கள் திறந்தால் தான் - (என்) உலகமே இயங்கும்,
எகிப்து தேசத்தின் தலைவியே -
பூசையே உனக்காக...!

Friday, December 9, 2011

பேதம்

சொல்வதொன்று செய்வதொன்று-
அரசியலில் அழகு -
அழகில்லை - என்
அரசியின் இயல்பிற்கு...!
  

Thursday, December 8, 2011

ஏமாற்றம்

கோடையில் கானல் நீர் - எதிர்பார்ப்பு
தேடிச் சென்று பெறுவது - ஏமாற்றம் 
ஏளனமாய் சிரிக்கும் சூரியன் - என் மனசாட்சி
கற்றுக்கொண்டேன் - 
கறைவது கானல் நீர் மட்டும் அல்ல -
நானும் தான்...!

Wednesday, November 23, 2011

கவிதை

காண்பதற்கு இனிய ஓவியமே,
உன்னைக்  கண்ட போது-
நான் உளறிய வார்த்தைகள் 
ஆயின - கவிதை..!

Sunday, November 20, 2011

அழகி..!

ஒப்பனை இல்லா அழகியே -
உன் அழகிற்கு - உலகில்
ஒப்பு இணை இல்லை.

Thursday, November 17, 2011

வலி

தேர்வுகளின் பின்
முடிவுகளுக்காக எதிர்பார்ப்பதும் -
பிரசவ வலி தான் - 
மாணவர்களுக்கு...!

Tuesday, November 15, 2011

ஆயுதம்

கண்டுகொண்டேன் இன்று -
அஹிம்சையால்  உயிரை எடுக்கும் ஆயுதம் -
மௌனம்....!

Sunday, November 13, 2011

கவிதையே நீயடி..!

சின்னப்பெண்ணே,
என் கவிதையே நீயடி,
நீ அதன் விளக்கம் கேட்பது ஏனடி...!

Saturday, November 12, 2011

மழலை மொழி

அழகிய நக்ஷதிரங்களே...!
மஞ்சள் பூசுவதை நிறுத்துங்கள்,
எந்தன் அம்புலி மாமாவிற்கு
உங்களால் மஞ்சள் காமாலை - 
பௌர்ணமி...!

Wednesday, November 9, 2011

நான் எழுதுகிறேன்

என் அன்பே,
அன்று எழுதினேன் உனக்கு பிடித்ததால்,
இன்றும் எழுதுகிறேன் -
உனக்கு பிடித்ததால் - வேறொருவனை..!

Monday, November 7, 2011

முதல் பாடம்..!

சுண்டு விரலளவே உள்ள எழுதுகோல்,
வேண்டாம் என வீசி எறிந்தேன் - 
எடுத்தான் குப்பை அள்ளும் சிறுவன்,
சுண்டு விரலோடு சேர்த்துப்பார்த்தான்,
வைத்தான் சிரித்துக்கொண்டே சட்டைப்பையில் -
கற்றுக்கொண்டேன் முதல் பாடம் - 
ஏக்கத்தின் வெளிப்பாடு - சிரிப்பு :(

Saturday, November 5, 2011

தமிழச்சிக்கு...!

அகரமும் அவதி - அன்பே நீ கோபம் கொண்டால்,
சிகரமும் சிறியது - உன்னை தேடிச் செல்லும்போது, 
தகரமும் தங்கம் - ரசவாத ரகசியம் உன் காதில் ,
நகரமும் நரகம் - நீ இல்லாதபோது,
ழகரமும் கலங்குதடி - உந்தன் வடிவைக் கண்டு..!

Tuesday, November 1, 2011

ஒப்பிலக்கணம்..!

தேய் பிறை இல்லாக்  காலம்,
மனம் பறவையாய் பறந்த தருணம்,
செய்த சேட்டைகள் - மன நினைவில்,
விழியின் ஓரம் - கண்ணீர் துளியில் -
கல்லூரி வாழ்வும் காதல் வீழ்ச்சியும்! 

பசி..!

என் செல்லமே !
நீ இருக்கும் வரை உன்னோடு தான்,
நீ என்னை மறந்தாலும் 
நான் உன்னை மறவேன் -
பசி..!

Thursday, October 27, 2011

அல்லியின் பிரிவு

அல்லி  காத்திருகிறது  நிலவொளிக்காக,
அல்லிக்கு  தெரியாது  இன்று  அமாவாசை  என்று  -
அல்லிக்கு  உண்டு  மோட்சம்  பதினைந்து நாட்களில்!
போர்க்களத்தில்  மணாளனை இழந்த  மங்கைக்கு?

- அனிதா 

நிழல் நிஜமாகிறது

என்  விழிகளுக்கு இத்தனை ஆற்றலா!!
சற்றும்  இமைக்காமல்  உன்  புகைப்படத்தை  உற்று  பார்த்தால்  -
அடடா..நிழல்கூட  இங்கே  நிஜமாகிறது!!

- அனிதா

மயிலின் மையல்

கனத்த கார்மேகம்
அடைமழை அறிகுறி,
சிலிர்க்கும் அதைக் கண்ட தோகை மயில் -
உன்னைக் கண்ட நான்...!

 - அனிதா

திருவிழா

என் உள்ளம்  என்னும் ஊரில்
இன்று கொண்டாட்டத் திருவிழா,
இருவருக்கு மட்டும் -
என்னவளின் பிறந்தநாள்...! 

~ என் அன்பு அ(னிதா)க்காவின் கவிதை :) :)

எதிர்பார்ப்பு

பல முறை பசியோடு காத்திருந்தேன் - வரவில்லை, 
வெயிலில் வெந்து மடிந்தேன் - 
அப்போதும் வரவில்லை,
பிறவிகள் பல எடுத்தாலும் -
மாறாது எந்தன் எதிர்பார்ப்பு - 
மழையை நோக்கும் நெர்ப்பயிறும் - 
உன்னை தேடும் நானும்! 

Wednesday, October 26, 2011

தீபாவளி

மண் வளம் போற்றிட - பூந்தொட்டி,
கடல் வளம் பெருக - சங்கு சக்கரம்,
ஊர்வன பறப்பன - குருவி வெடி பாம்பு மாத்திரை,
அறிவியல் வளர்ச்சிக்கு - ரயில் பெட்டி,
வின்வெளி ஆராய்ச்சிக்கு -  ஏவுகணை,
நாட்டுப்பற்று விதைத்திட - நேதாஜி வெடி,
இறை நம்பிக்கை உள்ளோர்க்கு - லக்ஷ்மி வெடி,
என நம் முன்னோர்கள் - 
மனிதகுலத்திற்கு தேவையான 
அனைத்தையும் போற்றினார்கள்...!

நாமோ இயற்கையை அழித்து,
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து,
காற்றை மாசுபடுத்தி, 
மொழி மதம் நாடு எல்லாம் மறந்து,
நமக்கு நாமே விரோதி ஆகின்றோம்...!

சற்றே யோசிப்போமாக..!
தீப ஒளி திருநாளில் -
நம் உள்ளம் ஒளி பெறட்டும்....!

Tuesday, October 25, 2011

ஊடல்

மின்னல்  வெளிச்சமாய்  கோரைப்பற்கள்,

இடி முழக்கமாய்  கண்களின்  தாக்குதல்,


சாரலாய் வரும் - முடிவு  பெறாத  வார்த்தைகள்,

பேய்  மழையாய்  நோகடிக்கும்  - முற்றுபெற்ற  சொற்கள்,

வெள்ளமாய்  பெறுகும்  கண்ணீர்  துளிகள்,


இவை  அனைத்தும்  தேவைதானா ??!


தனிமை  என்றுமே  இனிமை  தானா...!!


அறவே  இல்லை....!!!


அடை மழைக்கு  பின்  துளிர்த்தெழும்  -


செழிப்பான தளிர்  தான்  - ஊடலின் பின் வரும் காதல் :)



விவாகம்

சினம்  கொள்ளும்  வேங்கை  - பூனையாய் மாறியது ,

யார்  சொல்லியும்  கேளாதவன்  - மெல்லிய  பூவின்  ரசிகன்  ஆனான் ,


புலால் உண்பவன்  - புல்லினங்களின் கூடலைக் கற்றுக்கொண்டான் ,


குட்டிச் சாத்தான்  சொல்லும்  குற்றேவலையும் செய்தான் ,


நோய்  தீர்க்கும்  மருந்து  -



பல  தேசங்கள்  தேடியும்  கிடைக்கவில்லை ,

குறி  சொல்லும் நங்கை  வந்தாள் -


மருந்தின்  பெயரை அன்னையிடம்  கூறினாள் -



"விவாகம்" 

மண மாலை

தென்றலை  வந்தாய்  தோழியாய்..
.
சாரலாய்  இன்பம்  தந்தாய்  சிநேகிதியாய்...


அடை மழையாய் பெய்தாய் என்  தோட்டத்தில் ....


இன்று பூத்துக் குலுங்குகிறது , 


மண மாலையில் பூக்கள் - 


மணமேடையில்  நான் -


மங்கையின்  கரம்  பிடிக்கும் மணாளனாய்... :)



பிரிவு

"நீயாவது  உன்  காதலியை  முதுமிட்டுப்போ  - 
என்  பிரிவு  உனக்கு  வேண்டாம்  "-
காதலன்  - மழையிடம்...!

முதல் மயக்கம்

அன்றொருநாள்  உன்னை  பார்த்த  நொடியில்  சிதறினேன்
இன்று உன்னை  பிரதிபலிக்கிறேன்  பலமுறை  - 
கண்ணாடிச் சிற்களாய் ......! 


கண்ணாமூச்சி....!

அலுவலகத்தில் நான்....
எழ மறுக்கும் குழந்தையாய் சிணுங்கியது - என் கை பேசி,
அன்பு மனைவி ஆனந்தமாய் கூறினாள்,
"நம் வீட்டிற்கு ஒருவர் வரபோகிறார்
மாலை மருத்துவரிடம் செல்ல விரைவாய் வரவும்" என்று,
பல வருடங்களுக்குப்பின் வந்த நற்செய்தி,
ஆனந்தத்தில் சிரிக்கும் மழலையாய் வந்தது கண்ணீர்..!

மாலையில் மருத்துவர் -
"இது குழந்தை அன்று...!"
பிறக்கும் முன்பே விளையாடுகிறான் -
எங்கள் மாயக்கண்ணன் -
"கண்ணாமூச்சி....!"